கீது மோகன்தாஸ் இயக்கத்தில், ‘கேஜிஎஃப்’ மூலம் பான்-இந்தியா நட்சத்திரமாக உயர்ந்த யஷ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டாக்சிக்’. இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுடாரியா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், பான்-இந்தியா மொழிகளுடன் ஆங்கில மொழியிலும் தனியாக வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட நிலையில், தற்போது வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘டாக்சிக்’ திரைப்படத்தின் அறிமுக டீசர் வெளியானபோது அதில் இடம்பெற்ற சில ஆபாசமான மற்றும் சர்ச்சைக்குரிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பாடல்கள் மற்றும் மற்றொரு டீசரும் வெளியிடப்பட்ட நிலையில், அதில் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தன. இதன் தொடர்ச்சியாக தற்போது இப்படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகைகளை மையமாகக் கொண்டு ‘லேடீஸ் அண்ட் லேடீஸ்’ என்ற தலைப்பில் புதிய முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த புதிய முன்னோட்ட வீடியோவில் நயன்தாரா, கியாரா அத்வானி மற்றும் ருக்மணி வசந்த் ஆகியோர் தலா தனித்துவமான, வலிமைமிக்க கதாபாத்திர தோற்றங்களில் காட்சியளிக்கின்றனர். மறுபுறம் யஷ் தனது அதிரடியான ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். தற்போது இந்த முன்னோட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இந்த முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
