தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தனது திருமண வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்புகளை முதல் முறையாக வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்துள்ள இந்த மனம் திறந்த பேட்டி, சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகிறது.
மலையாளத் திரையுலகின் மூலம் நடிகையாக அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி, பின்னர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளார். ‘ஜகமே தந்திரம்’, ‘கார்கி’, ‘கேப்டன்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’, ‘மாமன்’, ‘தக் லைஃப்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் பிஸியான நடிகையாக தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ள ‘கட்டா குஸ்தி-2’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் ஐஸ்வர்யா லட்சுமி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்த எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். ஆரம்ப காலங்களில் திருமணம் என்ற உறவுக்குள் நுழைவதில் தனக்கு பல தயக்கங்களும் குழப்பங்களும் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “‘கட்டா குஸ்தி-2’ திரைப்படத்தில் ஒரு குழந்தையுடன் மிகவும் நெருக்கமாக நடித்தபோது, என்னுள் இருந்த தாய்மை உணர்வு வெளிப்பட்டது. அதன் பிறகு திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையை நான் வேறு ஒரு கோணத்தில் இருந்து பார்க்கத் தொடங்கினேன். என் வாழ்க்கைத் துணையாக வருபவர் எனக்கு நல்ல கணவராக இருப்பதுடன், எதிர்காலத்தில் என் குழந்தைக்கு சிறந்த தந்தையாகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் என்னை புரிந்துகொள்ளக்கூடிய, முழு நம்பிக்கையுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒருவரைத்தான் நான் வாழ்க்கைத் துணையாக விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமியின் இந்த மனம் திறந்த கருத்துகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
