இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் வரும் ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் திகழும் ஜி.வி. பிரகாஷ் குமார், சமீபத்தில் வெளியான ‘ஹாப்பி ராஜ்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இம்மார்ட்டல்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ளார்.
மேலும், டி.எம். கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். காதல், திரில்லர் மற்றும் பேன்டஸி அம்சங்கள் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ‘இம்மார்ட்டல்’ திரைப்படத்தின் முதல் பாடலாக ‘லவ்யூ லவ்யூ காட்டேரி’ வெளியிடப்பட்டுள்ளது. ஷாலி எழுதியுள்ள இந்தப் பாடலை சாம் சி.எஸ். மற்றும் ரேஷ்மா ஷ்யாம் இணைந்து பாடியுள்ளனர். தற்போது இப்படம் ஜூலை 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
