இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ள புதிய திரைப்படம் தொடர்பாக முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 23’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அழுத்தமான காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகவுள்ள இந்த திரைப்படம், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே மிகப்பெரிய வணிக சாதனையை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் டிஜிட்டல் (OTT) உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் ரூ.20 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிரத்னத்தின் முந்தைய பிரம்மாண்ட படைப்புகளான ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் கமல்ஹாசனுடன் இணைந்து இயக்கிய ‘தக் லைஃப்’ திரைப்படங்களின் ஓடிடி உரிமத் தொகையுடன் ஒப்பிடும்போது, இந்த தொகை சற்றுக் குறைவாக இருந்தாலும், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இவ்வளவு பெரிய தொகைக்கு டிஜிட்டல் உரிமம் விற்பனையானது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் இந்தியா டாக்கீஸ் நிறுவனங்கள் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகின்றன.
