ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘ஓ சுகுமாரி’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், ‘காக்கா முட்டை’, ‘தர்மதுரை’, ‘ரம்மி’, ‘கனா’, ‘சாமி 2’, ‘வடசென்னை’, ‘டிரைவர் ஜமுனா’, ‘பர்ஹானா’, ‘தீராக் காதல்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில், இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், இளம் நடிகர் திருவீர் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தில் ஜான்சி, விஷ்ணு ஓ லட்டு, ஆமணி, முரளிதர், ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தில் அவர் ஏற்றுள்ள ‘தாமினி’ என்ற கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு சி.ஹெச். குஷேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் மஞ்சிராஜு இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வைரலானது. இந்த நிலையில், ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading