‘லவ் ஓ லவ்’ படத்திற்காக பவீஷ் கடுமையாக உழைத்துள்ளார் – இயக்குனர் கஸ்தூரி ராஜா!

‘NEEK’ திரைப்படத்தின் கதாநாயகன் பவிஷ் நடித்துள்ள புதிய திரைப்படமான ‘லவ் ஓ லவ்’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மூலம் வெளியிடப்பட்டது. காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டனர்.

அப்போது பேசிய இயக்குநர் கஸ்தூரிராஜா, “பவிஷை உருவாக்கியவர் தனுஷ்தான். பவிஷின் நடிப்பிலும், அணுகுமுறையிலும் தனுஷின் தாக்கம் தெளிவாக இருக்கிறது. நான் தனுஷை நடிகராக அறிமுகப்படுத்தினேன். அந்த திரைப்படம் வெற்றி பெற்றது. அதன்பிறகு அவரை வைத்து ‘ட்ரீம்ஸ்’ திரைப்படத்தை இயக்கினேன். ஒரு நடிகரை அறிமுகப்படுத்துவது அல்லது வாய்ப்பு வழங்குவது மட்டும் போதாது. அதற்குப் பிறகு அவர் தனது திறமையால் தன்னைத் தானே வளர்த்துக் கொள்ள வேண்டும். ‘ட்ரீம்ஸ்’ படப்பிடிப்பு முடிந்ததும், நான் தனுஷுக்கு ஒரே ஒரு அறிவுரையை மட்டுமே கூறினேன். ‘உன் இயக்குநரோ அல்லது தயாரிப்பாளரோ ஷாட் எடுக்க தயாராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் சொன்ன நேரத்திற்கு நீ தவறாமல் சென்று விட வேண்டும்’ என்றேன். அந்த ஒழுக்கத்தை இன்று வரை தனுஷ் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்,” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “எனது முதல் மகன் செல்வராகவன், முதல் பேரன் பவிஷ். இந்த திரைப்படத்திற்காக பவிஷ் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். தனுஷும் தனது ஆரம்ப காலங்களில் இப்படித்தான் கடுமையாக உழைத்தார். ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் முடிந்த பிறகு, ‘காதல் கொண்டேன்’ படத்திற்காக தனுஷை செல்வராகவனிடம் ஒப்படைத்தோம். அதன் பின்னர் இயக்குநர் சுப்ரமணியம் சிவா அவரை முழுமையான கதாநாயகனாக உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். அவரும் தனது திறமையால் தொடர்ந்து வளர்ந்தார். அதுபோல நீயும் உன்னை நீயே தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும்,” என்று பவிஷுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading