நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய வெற்றிப்படமான ‘அரவிந்த சமேத வீரராகவா’ திரைப்படத்திற்குப் பிறகு இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திரைப்படத்தை ஹாரிகா – ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ். ராதாகிருஷ்ணா தயாரிக்கிறார். மேலும், என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் நந்தமூரி கல்யாண் ராம் இணை தயாரிப்பாளராக உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு அட்டவணை தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் அறிவிப்பு போஸ்டரில் திரிசூலும் வேலும் ஒன்றிணைந்த காட்சியுடன் “ஒரே வேல், ஒரே நோக்கம், ஒரே தெய்வீக தீர்ப்பு” என்ற டேக்லைன் இடம்பெற்றுள்ளது. புராணக் கதைகளின் தாக்கத்துடன் தெய்வீக அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், முருகப் பெருமானை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், படம் அறிவிக்கப்பட்ட உடனேயே சமூக வலைதளங்களில் சர்ச்சையும் எழுந்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவில், “வடக்கில் பிறந்து, மையப்பகுதியில் உருப்பெற்று, தெற்கில் வழிபடப்பட்டு, இப்போது பிரபஞ்சத்திற்கே சொந்தமாகவிருக்கும் ஒரு காவியம் இது” என்று குறிப்பிட்டிருந்தார். இதில் முருகப் பெருமான் வடஇந்தியாவில் பிறந்தவர் என்ற அர்த்தம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் மக்களின் அடையாளக் கடவுளாக போற்றப்படும் முருகனை வடநாட்டு கடவுளாக சித்தரிக்கும் முயற்சியில் மத அரசியல் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
