தெலுங்கில் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் நடிகர் பிருத்விராஜ் ஆகியோர் நடிப்பில் ‘வாரணாசி’ திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் பிருத்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்துகொண்ட பிருத்விராஜ், இயக்குநர் ராஜமௌலி எந்த அளவிற்கு துல்லியமான கலைநயத்துடன் பணியாற்றுபவர் என்பதைப் பற்றிய தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வாரணாசி பின்னணியில் நடைபெறும் ஒரு முக்கியமான காட்சியின் படப்பிடிப்பின்போது, அந்த ஒரு காட்சியை முழுமையாக உருவாக்குவதற்காக சுமார் 90 முறை ரீடேக் எடுக்க வேண்டியிருந்தது. ஒரு காட்சி முழுமை பெற வேண்டும் என்பதற்காக அவர் எவ்வளவு பொறுமையுடனும், நுணுக்கமான அணுகுமுறையுடனும் செயல்படுகிறார் என்பதை அவருடன் பணியாற்றும்போதுதான் உணர முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு நடிகராக தனது எல்லைகளைத் தாண்டி சிந்திக்கவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் ராஜமௌலியின் இயக்கும் முறை தனக்கு மிகுந்த ஊக்கத்தை அளிப்பதாகவும் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
