பாலிவுட்டில் அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், 1930 முதல் 1970-கள் வரை பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா குமாரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘கமல் அவுர் மீனா’ என்ற திரைப்படம் உருவாக உள்ளது.
1939ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா குமாரி, 1946ஆம் ஆண்டு வெளியான ‘பச்சன் கா கேல்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் 1972ஆம் ஆண்டு வரை சுமார் 100 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருக்கும் இயக்குநர் கமல் அம்ரோகிக்கும் காதல் மலர்ந்து, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், 12 ஆண்டுகள் நீடித்த திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் பிரிந்தனர்.
இந்த நிலையில், தற்போது உருவாகவுள்ள அவரது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் முழுமையான துல்லியத்துடன் அமைய வேண்டும் என்பதற்காக, அவர் எழுதிய 2,000-க்கும் மேற்பட்ட கடிதங்கள் மற்றும் அவரது தனிப்பட்ட டைரிகளை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மீனா குமாரியின் தனிப்பட்ட வாழ்க்கை, திரைத்துறையில் அவர் சந்தித்த ஏற்றத் தாழ்வுகள் மற்றும் இயக்குநர் கமல் அம்ரோகியுடனான அவரது உறவு உள்ளிட்ட அம்சங்கள் இந்த திரைப்படத்தில் இடம்பெற உள்ளன. இதில் மீனா குமாரி கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
