பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கலிபா’ திரைப்படம் நேற்றா மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வைசாக் இயக்கியுள்ள இப்படத்தில் பிருத்விராஜ் ‘மம்பரக்கல் அமீர் அலி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்தின் தாத்தாவாக மோகன்லால் ‘மம்பரக்கல் அகமது அலி’ என்ற வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக மாளவிகா ஷர்மா ‘ஃபிசா’ என்ற பாத்திரத்தை ஏற்றுள்ளார். இவர்களுடன் மோகினி, இந்திரன்ஸ், நீல் நிதின் முகேஷ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். ஜினு ஆபிரகாம் திரைக்கதை எழுதியிருப்பதுடன், ஜினு இன்னோவேஷன்ஸ் நிறுவனம் சார்பில் படத்தையும் தயாரித்துள்ளார். ஜோமன் டி ஜான் ஒளிப்பதிவையும், சாமன் சாக்கோ படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.
தங்கக் கடத்தலை மையமாகக் கொண்ட உலகத்திற்குள் அமீர் அலி எப்படி செல்கிறார் என்பதே படத்தின் ஆரம்பப் பகுதியின் பிரதான அம்சமாக உள்ளது. குடும்பத்தின் பாரம்பரிய தொழிலாக இருக்கும் தங்கக் கடத்தலில் அவரது தாத்தா அகமது அலி ஏற்கெனவே முக்கியமான ஆளுமையாக இருந்திருக்கிறார். சில சூழ்நிலைகள் அமீர் அலியையும் அதே பாதைக்குள் அழைத்துச் செல்ல, அதன்பிறகு கதை புதிய திருப்பத்தை எடுக்கிறது.
முதல் பாதியில் கதாநாயகனின் பின்னணி, குடும்பம் மற்றும் தங்கக் கடத்தல் தொழிலுக்குள் அவர் நுழையும் காரணங்கள் விரிவாகச் சொல்லப்படுகின்றன. இடைவேளைக்குப் பிறகு அமீர் அலிக்கும் அவருக்கு எதிராக நிற்கும் கும்பல்களுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைகிறது. இதனுடன் அவரது காதல் மற்றும் குடும்பப் பிரச்னைகளும் கதையில் இணைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் தங்கக் கடத்தலைச் சுற்றி நடைபெறும் அரசியல் நகர்வுகளையும் திரைக்கதை தொட்டுச் செல்கிறது.
தங்கம் கடத்தப்படும் விதங்களை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. அதேபோல் ஆக்ஷன் காட்சிகளும் படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளன. அமீர் அலியாக பிருத்விராஜ் தனது கம்பீரமான தோற்றம் மற்றும் ஸ்டைலான அணுகுமுறையால் கதாபாத்திரத்தை வலுவாகக் காட்சிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரது ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் கவனம் ஈர்க்கிறது.
ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் வேகத்தைக் கொடுக்கிறது. ஜோமன் டி ஜானின் ஒளிப்பதிவும் சாமன் சாக்கோவின் படத்தொகுப்பும் தங்கக் கடத்தலைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தை தக்கவைத்துள்ளன. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் தோன்றியுள்ள மோகினியும் தனது கதாபாத்திரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.ஆனால், படத்தில் மோகன்லால் தோன்றும் தருணம் தனியாக கவனம் பெறுகிறது. அவரது என்ட்ரிக்குப் பிறகு அந்தப் பகுதி முழுவதும் வேறொரு பரிமாணம் பெறுகிறது.
‘கலிபா’ ஒரு தனி சினிமாட்டிக் உலகமாக விரிவடைவதற்கான அடித்தளத்தை முதல் பாகத்திலேயே அமைத்துள்ளது. இது முதல் பாகம் என்பதே டைட்டிலுடன் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கதாபாத்திரங்களையும் அந்த உலகத்தையும் அறிமுகப்படுத்தும் தொடக்க அத்தியாயமாகவே படம் செயல்படுகிறது. அடுத்த பாகத்திற்கான பல வாய்ப்புகளையும் திரைக்கதை விட்டுச் செல்கிறது. அதேநேரம், முதல் பாகமாக இருந்தாலும் ஒரு முழுமையான திரை அனுபவத்தை வழங்குவதில் படம் சில இடங்களில் தடுமாறுகிறது. படம் முடிந்த பிறகு நீண்ட நேரம் நினைவில் நிற்கும் காட்சிகள் குறைவாக இருப்பது பலவீனமாக தெரிகிறது. பிருத்விராஜின் ஸ்டைலான நடிப்பு, நேர்த்தியான சண்டைக் காட்சிகள், மோகன்லாலின் சிறப்புத் தோற்றம் ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்தாலும், கதையின் உள்ளடக்கம் அந்த அளவுக்கு வலுவாக அமையவில்லை என்பதே ‘கலிபா’வின் முக்கிய குறையாக தெரிகிறது.
