தமிழக அரசியலில் புதிய வரலாற்றை படைத்து, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
திரையுலகிலிருந்து அரசியலுக்கு வெற்றிகரமாக பயணித்துள்ள விஜய்யுடன் நீண்டகால நட்புறவு கொண்ட பல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அண்மைக் காலமாக அவரை நேரில் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர்கள் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட பலரும் சமீபத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த சூழலில், நடிகை சிம்ரன் நேற்று தனது குடும்ப உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து நடிகை சிம்ரன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பல ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து நடித்த பிறகு, மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களை எனது குடும்பத்தினருடன் மீண்டும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவரை அனைவருக்கும் பிடித்தமானவராக மாற்றிய அன்பு, பணிவு மற்றும் நேர்மை ஆகிய பண்புகள் இன்றளவும் மாறாமல் இருப்பதை நேரில் காண முடிந்தது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பும் தொலைநோக்குப் பார்வையும் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. தமிழகத்தை சிறப்பான வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்ல அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
