நடிகர் வாகை சந்திரசேகர்-க்கு யுவ புரஸ்கார் தேசிய விருது!

வாகை சந்திரசேகர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகராகவும், அரசியல்வாதியாகவும் அறியப்படுபவர். தனது இயல்பான மற்றும் எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ள அவர், ‘நண்பா நண்பா’ திரைப்படத்தில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பிற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். திரைப்படத் துறையில் மட்டுமல்லாமல் அரசியல் துறையிலும் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர், திமுக சார்பில் வேளச்சேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் திரையுலகின் மூத்த கலைஞர்களில் ஒருவரான வாகை சந்திரசேகர், இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மே 3, 1956 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வாகைகுளம் கிராமத்தில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே மேடை நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மீது அதிக ஈர்ப்பு கொண்டிருந்த வாகை சந்திரசேகர், தனது கலைப்பயணத்தை நாடக மேடைகளில் இருந்து தொடங்கினார். பின்னர் 1980களில் தமிழ் திரைப்படங்களில் துணை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், தனது திறமையான நடிப்பின் மூலம் விரைவில் கவனம் பெற்றார். அவரது கலைப்பங்களிப்பை பாராட்டி, 1991ஆம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருதை வழங்கி கவுரவித்தது.

இந்த நிலையில், மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும் “யுவ புரஸ்கார்” தேசிய விருது நடிகர் வாகை சந்திரசேகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சங்கீத நாடக அகாடமி விருது (Sangeet Natak Akademi Puraskar) என்பது இந்தியாவில் இசை, நடனம், நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளுக்காக வழங்கப்படும் மிக உயரிய தேசிய விருதுகளில் ஒன்றாகும். இசை, நடனம், நாடகம், பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலைகள், பொம்மலாட்டக் கலைகள் உள்ளிட்ட துறைகளில் ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த உயரிய அங்கீகாரம் வாகை சந்திரசேகரின் கலைப்பயணத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading