முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகர் சிம்பு… வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல ஆண்டுகளாக ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்த விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று புதிய அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருகிறார். தனது அரசியல் கட்சியை தொடங்கி சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அவரது இந்த வெற்றிக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த அரசியல் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த சந்திப்புகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நடிகர் சிலம்பரசன் சமீபத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள அவர், அந்த தருணம் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தனது பதிவில், “இன்று மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணாவை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியளித்தது. தமிழக மக்களுக்காக அவர் மேற்கொள்ளும் சேவைகளில் தொடர்ந்து வெற்றி பெறவும், அவருக்கு வலிமையும் இறைவனின் ஆசீர்வாதமும் கிடைக்கவும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜய்யும், நடிகர் சிலம்பரசனும் திரைப்படங்களில் இணைந்து நடித்ததில்லை என்றாலும், இருவருக்கும் இடையே நீண்டகால நல்லுறவு இருந்து வருகிறது. குறிப்பாக, சிலம்பரசன் நடித்த ‘வாலு’ திரைப்படம் வெளியீட்டில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட காலகட்டத்தில், விஜய் அவருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தார். அப்போது சிலம்பரசனுக்கும் அவரது தந்தை டி. ராஜேந்தருக்கும் தனது ஆதரவை வழங்கிய விஜய்யின் செயல் திரையுலகில் பெரிதும் பேசப்பட்டது. இந்த பின்னணியில் நடைபெற்றுள்ள தற்போதைய சந்திப்பு ரசிகர்களிடையே கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading