தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நாகார்ஜுனா, கதாநாயகனாக தனது திரைப்பயணத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளார். பல்வேறு வெற்றித் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள அவர், தற்போது தனது 100வது திரைப்படத்தில் நடித்து வருவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது ஆரம்பகால திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது 1989ஆம் ஆண்டு. அந்த ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கீதாஞ்சலி’ மற்றும் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான ‘சிவா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நாகார்ஜுனாவின் திரை வாழ்க்கையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றன. ‘சிவா’ திரைப்படம் அவரை ஒரு அதிரடி நாயகனாக ரசிகர்களிடையே நிலைநிறுத்திய நிலையில், ‘கீதாஞ்சலி’ திரைப்படம் அவரை காதல் நாயகனாக இளம் ரசிகர்களின் மனதில் பதியச் செய்தது. இந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றி, அவரை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அந்தஸ்திற்கு உயர்த்தியது.
மணிரத்னம் தெலுங்கில் இயக்கிய முதல் திரைப்படமான ‘கீதாஞ்சலி’யில் கிரிஜா ஷெட்டர் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். காலத்தால் அழியாத காதல் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த படம் வெளியாகி தற்போது 37 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு நாகார்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
