நடிகர் விஷால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த சந்திப்பு குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த பதிவில், லயோலா கல்லூரியில் படித்த காலம் முதலே விஜய்யை “டார்லிங்” என்ற அன்பான பெயரால் அழைத்து வருவதாகவும், அந்த அழைப்பு இன்றுவரை மாறாமல் தொடர்வதாகவும் விஷால் குறிப்பிட்டுள்ளார். வளர்ந்து வரும் நடிகராக இருந்த காலத்திலிருந்து பல தடைகளையும் விமர்சனங்களையும் தனது அமைதியாலும் வெற்றிகளாலும் கடந்து, சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைந்து பின்னர் தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்த விஜய்யின் பயணத்தை நேரில் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “இன்று உங்கள் பதவியும் பொறுப்பும் மாறியிருக்கலாம். ஆனால் உங்கள் அன்பும் எளிமையும் மாறவில்லை. உங்களை நேரில் சந்தித்தபோது, பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே அன்பும் அரவணைப்பும் இன்னும் தொடர்வதை உணர முடிந்தது. கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் மற்றும் என் அன்பு நண்பர் உதயநிதி உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்த அனுபவம் எனக்கு இருந்தாலும், நம் மாநிலத்தின் முதலமைச்சரை அதே ‘டார்லிங்’ என்ற அன்பான சொல்லால் அழைத்தது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது. எனக்குள் இருக்கும் ரசிகனின் உணர்வு என்றும் மாறாது” என்று விஷால் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, “கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். வழக்கமாக வழங்கப்படும் பூங்கொத்து மற்றும் பொன்னாடையை ஏற்றுக்கொள்ளாமல், அதற்காக செலவிடப்படும் தொகையை தமிழகத்தில் வசிக்கும் தகுதியான மற்றும் பின்தங்கிய சூழலில் உள்ள மூன்று பெண் குழந்தைகளின் கல்விக்காக உங்கள் பெயரில் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி. அந்தச் சிறுமிகள் வாழ்நாள் முழுவதும் உங்களை பெருமையுடன் நினைவுகூர்வார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, “மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துகள் முதலமைச்சர் அவர்களே. உங்கள் தலைமையில் தமிழகம் மேலும் பல நேர்மறையான மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் அடையட்டும். உங்கள் பதவிக்காலம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையட்டும்” என்று விஷால் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும், அவரது பதிவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
