‘சின்ன சின்ன ஆசை’ பாடல் மூலமாகவும், ரோஜா படத்தின் மூலமாகவும் பிரபலமானவர் மதுபாலா. தற்போது மும்பையில் வசித்து வருகிறார். வர்ஷா வாசுதேவ் எழுதி இயக்கியுள்ள சின்ன சின்ன ஆசை திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “காசி நகரில் எதிர்பாராத விதமாக சந்திக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் தருணங்களை உணர்வுப்பூர்வமாக திரையில் வெளிப்படுத்தும் சின்ன சின்ன ஆசை படத்தில், பிரபல மலையாள நடிகரும் சமீபத்தில் கருப்பு படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவருமான இந்திரன்ஸ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ள சின்ன சின்ன ஆசை திரைப்படம் யு சான்றிதழ் பெற்றுள்ளது.
மனிதர்களுக்குள் இருக்கும் சொல்லப்படாத சின்ன சின்ன ஆசைகள் ஏராளம். அந்த நுண்ணிய உணர்வுகளை அவற்றின் சாரம் மாறாமல் திரையில் கொண்டு வரும் முயற்சியே சின்ன சின்ன ஆசை” என்கிறார்.
