கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பார்த்திபன் கனவு படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கரு. பழனியப்பன். இந்த படத்தில் ஸ்ரீகாந்த், சினேகா ஆகியோர் நடித்திருந்தனர். முதல் படத்திலேயே இயக்குநர் கரு. பழனியப்பனுக்கு தமிழக அரசின் சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிடைத்தது. விஷால் நடித்த சிவப்பதிகாரம், சேரன் – சினேகா நடித்த பிரிவோம் சந்திப்போம் படங்களை இயக்கினார். மந்திரப்புன்னகை, சதுரங்கம், ஜன்னல் ஓரம் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.
ஹவுஸ்புல், நட்பே துணை, டி பிளாக், யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்களில் கரு. பழனியப்பன் நடித்திருக்கிறார். மேலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாத மேடை நிகழ்ச்சியில் நடுவராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
தற்போது நடிகர் காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை கரு. பழனியப்பன் இயக்கி வருகிறார். தேனியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கரு. பழனியப்பன் இயக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அந்த படத்திற்கு குக்கர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது நடிகர் காளி வெங்கட் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
