பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் ஷில்பா ஷெட்டி, தமிழ் ரசிகர்களிடையே ‘மிஸ்டர் ரோமியோ’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் நடிகர் விஜய் நடித்த ‘குஷி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மேக்கோ ரீனா மேக்கோ ரீனா’ பாடலில் தனது உற்சாகமான நடனத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தற்போது திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தொழில் துறையிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் அவர், ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி தொடர்பான தனது அனுபவங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
51 வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக உடல்தகுதியையும் அழகையும் பராமரித்து வரும் ஷில்பா ஷெட்டி, சமீபத்தில் தனது ஆரோக்கிய வாழ்க்கை முறைகள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “நடிகர்களைவிட நடிகைகளுக்கு உடல்நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நல்ல ஆரோக்கியத்திற்கு தரமான தூக்கம் மிகவும் முக்கியம். அதேபோல் சரியான நேரத்தில் சத்தான உணவுகளை உட்கொள்வதும் அவசியம். இந்த இரண்டும் உடல்நலத்தின் அடிப்படை தூண்களாகும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “குடும்ப பொறுப்புகள் மற்றும் அன்றாட வேலைகள் காரணமாக பல பெண்கள் தங்களது உடல்நலனை கவனிக்காமல் விடுகின்றனர். ஆனால் எந்த சூழ்நிலையிலும் முதலில் தங்களது ஆரோக்கியத்திற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். போதுமான தூக்கம் இல்லாதபோது உடல்நலம் மட்டுமின்றி வாழ்க்கையில் அடைய வேண்டிய இலக்குகளும் பாதிக்கப்படுகின்றன” என்று வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ஷில்பா ஷெட்டி, “சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழியைப் போல, பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் ஒரு குடும்பமும் உறுதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். குடும்பத்தின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் பெண்களின் ஆரோக்கியம் மிக முக்கியமானது. எனவே பெண்கள் தங்களது உடல்நலனைக் கவனித்து, அதை முதன்மையான பொறுப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஷில்பா ஷெட்டியின் இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. பெண்களின் உடல்நலம், ஆரோக்கிய வாழ்க்கை முறை மற்றும் சுய பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவரது கருத்துகள் பலரது பாராட்டையும் பெற்றுள்ளன.
