கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டோரதி’. கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மீண்டும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் கொல்லப்படும். ஆனால், அந்த மரணம் யாரால் நிகழ்ந்தது, அதற்கான காரணம் என்ன என்பது படத்தில் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. இதனால் படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு பல சந்தேகங்கள் எழுந்தன. இந்தக் கேள்வி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ், தனது கதாபாத்திரத்தின் மரணம் தொடர்பான பின்னணியைப் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “எனக்கும் இதே சந்தேகம் இருந்தது. அந்தக் கதாபாத்திரத்திற்கு என்ன நடந்தது என்பதை ஏன் படத்தில் காட்டவில்லை என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டேன். ஆனால், கதையை ஒரு திறந்த முடிவுடன் வைக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பொதுவாகப் பல திரைப்படங்களில் ஒரு கதாபாத்திரத்தின் மரணம் எப்படி நிகழ்ந்தது, அதற்குப் பின்னால் என்ன காரணம் இருந்தது என்பதையெல்லாம் விளக்கிவிடுவார்கள். அதனால் இதுபோன்ற கேள்விகள் நமக்கும் எழுவது இயல்புதான். ஆனால், ‘டோரதி’ படத்தில் அந்த வழக்கமான அணுகுமுறையை மாற்ற இயக்குநர் விரும்பினார். அந்தக் கதாபாத்திரம் எப்படி இறந்தது என்பதை நாம் ஏன் வெளிப்படுத்த வேண்டும்? அது எப்படியெல்லாம் நடந்திருக்கலாம் என்பதை ரசிகர்களாகிய நீங்களே உங்கள் கற்பனையில் முடிவு செய்துகொள்ளலாம்” என்றார்.
