எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிக்கும் திரைப்படம் ‘பிளாக் கோல்டு’. தீரன் அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ளார். அபிராமி வெங்கடாசலம் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில், அவர் முதன்முறையாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
இதுகுறித்து அபிராமி வெங்கடாசலம் கூறியதாவது: “காவல்துறை அதிகாரியாக நடிப்பது மிகவும் சவாலான அனுபவம். அந்தக் கதாபாத்திரத்தை முடிந்தவரை சிறப்பாகச் செய்திருக்கிறேன். இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தபோது, வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார் என்பதை அறிந்ததும், படத்தின் கதை நிச்சயம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. இயக்குநர் தீரனும் கதையை மிகவும் தெளிவாகவும், மற்ற படங்களிலிருந்து மாறுபட்ட வகையிலும் எடுத்துரைத்தார்.
இதற்கு முன்பு பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் உறுதியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவை கைநழுவிய அனுபவம் எனக்கு உண்டு. எனவே, இந்தப் படத்திலும் எனது கதாபாத்திரம் உறுதியாகியுள்ளதா என்று இயக்குநரிடம் பலமுறை கேட்டேன். ஆனால், அவர் என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார். இந்தக் கதாபாத்திரத்திற்கு அபிராமிதான் பொருத்தமாக இருப்பார் என்று தயாரிப்பாளரும் இயக்குநரும் தீர்மானித்து என்னைத் தேர்வு செய்தது, ஒரு நடிகையாக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் கொடுத்துள்ளது.
