புஷ்பா 2 திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ராக்கா திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அதிநவீன விஎப்எக்ஸ் தொழில்நுட்பப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும், இதுவரை அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோரின் பெயர்களை மட்டுமே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ராக்கா திரைப்படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மும்பையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, இந்த திரைப்படத்தை 2027ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தாலும், இறுதிக்கட்ட பணிகள் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொடர்பான பணிகளுக்காக மட்டும் சுமார் 10 மாதங்கள் வரை தேவைப்படும் என கூறப்படுகிறது.
மேலும் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டிசம்பர் மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருந்து வருகிறது. காரணம், அவர் நடித்த புஷ்பா திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் டிசம்பர் மாதத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூல் சாதனைகளையும் பெற்றன. இதன் காரணமாகவே ராக்கா திரைப்படத்தையும் 2027ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
—
