தமிழ் சினிமா நீண்ட காலமாக ஸ்டூடியோக்கள் மற்றும் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே சுழன்றுகொண்டிருந்த காலகட்டத்தில், அதை முற்றிலும் புதிய பாதைக்கு அழைத்துச் சென்று, தமிழ் திரைத்துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தியவர் இயக்குநர் பாரதிராஜா. இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் கிராம மக்களின் வாழ்க்கை முறையையும், மண்ணோடு இணைந்த மனித உறவுகளின் ஆழத்தையும், உணர்வுகளையும் மிகவும் இயல்பாகவும் மனதை வருடும் வகையிலும் திரையில் வெளிப்படுத்தியவர். தனது தனித்துவமான சிந்தனை, கலைநயம் மற்றும் புதுமையான அணுகுமுறையின் மூலம் எண்ணற்ற சிறந்த கலைப்படைப்புகள் உருவாக வழிவகுத்த திரைப்பட ஆளுமையாக பாரதிராஜா திகழ்ந்தார்.
தமிழ் சினிமாவில் அவரது வருகை ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ‘பாரதிராஜா வருவதற்கு முன்’ மற்றும் ‘பாரதிராஜா வந்த பிறகு’ என்று தமிழ் சினிமாவின் வளர்ச்சியைப் பிரித்துப் பேசும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர். தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை வழங்கி, இந்திய திரையுலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தனது திறமையை நிரூபித்தார். அவரது வாழ்க்கைப் பயணம் பல இளம் இயக்குநர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
1941 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பிறந்த பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னச்சாமி. அவருக்கு மூன்று சகோதரர்களும், மூன்று சகோதரிகளும் உள்ளனர். தனது பள்ளிக் கல்வியை சொந்த ஊரிலேயே முடித்த அவர், மாணவராக இருந்த காலத்திலேயே இலக்கியம், நாடகம், நடிப்பு மற்றும் இயக்கம் ஆகிய துறைகளில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார். ‘ஊர் சிரிக்கிறது’, ‘சும்மா ஒரு கதை’ போன்ற நாடகங்களை எழுதி, அவற்றை மேடைகளில் அரங்கேற்றி தனது கலைத்திறனை வெளிப்படுத்தினார். பின்னர் சுகாதார ஆய்வாளராக தனது பணியைத் தொடங்கிய அவர், சினிமா மீதான தீராத காதலால் சென்னை நோக்கி பயணமானார். சென்னையில் பெட்ரோல் பங்கில் வேலை செய்தபடியே மேடை நாடகங்களில் ஈடுபட்டு, திரைப்படத் துறையில் நுழைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
பின்னர் இயக்குநர் பி. புல்லையாவின் உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன் பிறகு பிரபல கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலின் கீழ் பணியாற்றி, திரைப்பட உருவாக்கத்தின் நுணுக்கங்களை ஆழமாக கற்றுக்கொண்டார். நீண்ட போராட்டங்களும் முயற்சிகளும் நிறைந்த பயணத்திற்குப் பிறகு ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவரது வருகைக்கு முன்பு ஸ்டூடியோக்களுக்குள் மட்டுமே இருந்த தமிழ் சினிமா, அவரது வருகைக்குப் பிறகு தமிழகத்தின் கிராமங்களையே இயற்கை அரங்கங்களாக மாற்றிக் கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
கிராம மக்களின் உணர்வுகளையும், அங்குள்ள வாழ்க்கைச் சூழலையும் எந்தவித செயற்கைத்தனமும் இன்றி அழகாகவும் உண்மைத்தன்மையுடனும் திரையில் பதிவு செய்தார். தனது முதல் திரைப்படத்திலேயே இயக்குநராக தனது ஆளுமையை நிரூபித்த அவர், அடுத்ததாக இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தையும் முழுமையாக கிராமப் பின்னணியில் உருவாக்கி வெற்றிப் படமாக மாற்றினார். கிராமக் கதைகளை மட்டுமே இயக்க முடியும் என்ற விமர்சனங்களும் அவரைத் தொடர்ந்து வந்தன. ஆனால் ‘சிகப்பு ரோஜாக்கள்’ திரைப்படத்தின் மூலம் அத்தகைய விமர்சனங்களுக்கு உறுதியான பதிலளித்து, தன்னால் அனைத்து வகை கதைகளையும் கையாள முடியும் என்பதை நிரூபித்தார்.
‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘வாலிபமே வா வா’, ‘மண்வாசனை’, ‘புதுமைப்பெண்’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கொடி பறக்குது’, ‘என்னுயிர் தோழன்’, ‘புது நெல்லு புது நாத்து’, ‘நாடோடி தென்றல்’, ‘கேப்டன் மகள்’, ‘கிழக்கு சீமையிலே’, ‘கருத்தம்மா’, ‘பசும்பொன்’, ‘தமிழ்செல்வன்’, ‘அந்திமந்தாரை’, ‘தாஜ்மகால்’, ‘கடல் பூக்கள்’, ‘ஈரநிலம்’, ‘கண்களால் கைது செய்’, ‘பொம்மலாட்டம்’, ‘அன்னக்கொடி’, ‘மீண்டும் ஒரு மரியாதை’ உள்ளிட்ட பல திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார். தமிழ் மொழி மட்டுமின்றி ‘சீதாகொகா சிலுகா’, ‘யுவதாரம் புலிச்சின்டி’, ‘ஈதரம் இல்லலு’, ‘ஜமடகனி’, ‘ஆராதனா’ போன்ற தெலுங்கு திரைப்படங்களையும், ‘சொல்வ சவான்’, ‘லவர்ஸ்’, ‘சாவேரே வாலி காடி’ போன்ற இந்தி திரைப்படங்களையும் இயக்கி தனது திறமையை பல மொழிகளில் நிரூபித்தார்.
‘கல்லுக்குள் ஈரம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பாரதிராஜா, அதன் பின்னர் ‘நிழல்கள்’, ‘தாவணி கனவுகள்’, ‘இதயம்’, ‘தந்துவிட்டேன் என்னை’, ‘காதல் வைரஸ்’, ‘ஆயுத எழுத்து’, ‘ரெட்டை சுழி’, ‘பாண்டியநாடு’, ‘நினைத்தது யாரோ’, ‘குரங்கு பொம்மை’, ‘படை வீரன்’, ‘சீதக்காதி’, ‘கென்னடி கிளப்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, ‘மீண்டும் ஒரு மரியாதை’, ‘ஈஸ்வரன்’, ‘ராக்கி’, ‘மாநாடு’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் மனோஜ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் ‘தாஜ்மஹால்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தும் திரைப்படத் துறையில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவின் திரைப்படப் பங்களிப்பை பாராட்டும் விதமாக, 2004 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கி கவுரவித்தது.
தேசிய விருதுகள் வரிசையில், 1982 ஆம் ஆண்டு ‘சீதாகொகா சிலுகா’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார். 1986 ஆம் ஆண்டு ‘முதல் மரியாதை’, 1988 ஆம் ஆண்டு ‘வேதம் புதிது’, 1995 ஆம் ஆண்டு ‘கருத்தம்மா’, 1996 ஆம் ஆண்டு ‘அந்திமந்தாரை’, 2001 ஆம் ஆண்டு ‘கடல் பூக்கள்’ ஆகிய திரைப்படங்களுக்காக தேசிய விருதுகளை வென்று இந்திய திரைப்பட உலகில் தனது சாதனைகளை பதிவு செய்தார்.
தமிழக அரசின் விருதுகளிலும் பாரதிராஜா தனக்கென முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். ‘16 வயதினிலே’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ஈர நிலம்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்காக தமிழக அரசின் விருதுகளை பெற்றுள்ளார். அதோடு பிலிம் ஃபேர் விருதுகள் மற்றும் ஆந்திர மாநில அரசின் பல்வேறு விருதுகளையும் வென்று திரைப்பட உலகில் தனது சாதனைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.
பாரதிராஜா இயக்கிய முக்கியமான திரைப்படங்களில் ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘வாலிபமே வா வா’, ‘மண்வாசனை’, ‘புதுமைப்பெண்’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கொடி பறக்குது’, ‘என் உயிர் தோழன்’, ‘புது நெல்லு புது நாத்து’, ‘நாடோடி தென்றல்’, ‘கேப்டன் மகள்’, ‘கிழக்கு சீமையிலே’, ‘கருத்தம்மா’, ‘பசும்பொன்’, ‘தமிழ் செல்வன்’, ‘அந்திமந்தாரை’, ‘தாஜ்மஹால்’, ‘கடல் பூக்கள்’, ‘ஈர நிலம்’, ‘கண்களால் கைது செய்’, ‘பொம்மலாட்டம்’, ‘அன்னக்கொடி’ உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை.
மேலும் அவர் இயக்கிய பிறமொழி திரைப்படங்களாக ‘கொத ஜீவிதலு’ (தெலுங்கு), ‘ரெட் ரோஸ்’ (இந்தி), ‘சீதாகொகா சிலுகா’ (தெலுங்கு), ‘லவர்ஸ்’ (இந்தி), ‘யுவதரம் பிலிசிண்டி’ (தெலுங்கு), ‘சவேரே வாலி காடி’ (இந்தி), ‘ஆராதனா’ (தெலுங்கு) ஆகிய திரைப்படங்கள் இடம்பெறுகின்றன. பல மொழிகளில் தனது கலைத்திறனை வெளிப்படுத்தி இந்திய திரைப்பட வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கியவர் பாரதிராஜா.
