‘ஜான் ஈ மன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிதம்பரம், தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதுடன், அதன் கதையம்சத்திற்காகவும் பாராட்டுகளைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் ரூ.60 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. உலகளவில் இப்படம் ரூ.225 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து சிதம்பரம் தற்போது ‘பாலன் தி பாய்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதையை ‘ஆவேஷம்’ திரைப்பட இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியுள்ளார். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு சிஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.வி.என் நிறுவனம் மற்றும் தேஸ்பியன் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் முழுமையாக புதுமுக நடிகர்கள் நடித்துள்ளனர்.
‘பாலன்’ என்பது 1938 ஆம் ஆண்டு வெளியான மலையாள சினிமாவின் முதல் ஒலிப்படத்தின் பெயராகும். மேலும், ‘விகதகுமாரன்’ மற்றும் ‘மார்த்தாண்ட வர்மா’ திரைப்படங்களுக்கு பிறகு மலையாளத்தில் வெளியான மூன்றாவது திரைப்படமாகவும் அது குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், ‘பாலன் தி பாய்’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வருகிற ஜூன் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
