ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர் மற்றும் அருண் முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘அங்கீகாரம்’. இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுக நடிகரான கே.ஜெ.ஆர் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அவருடன் விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல அனுபவமிக்க நடிகர்கள் இணைந்துள்ளதால் இந்த திரைப்படம் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ. விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் பா. ரஞ்சித்திடம் துணை இயக்குநராக பணியாற்றிய தென்பாதியான் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சமூக அக்கறையுடனும், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், விளையாட்டுத் துறையில் நடைபெறும் பல்வேறு பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியாக உருவாகியுள்ளது.
திரைப்படம் குறித்து இயக்குநர் தென்பாதியான் பேசுகையில், “பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தடகள விளையாட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் தங்களது வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், போராட்டங்கள் மற்றும் விளையாட்டுத் துறையின் மறைக்கப்பட்ட பல அவலங்களை இந்த திரைப்படம் பேசுகிறது. தனக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்காக நீதிமன்றம் வரை சென்று போராடும் ஒரு தடகள வீரரின் வாழ்க்கைப் பயணத்தை உணர்ச்சிகரமாகவும், தாக்கமிக்க வகையிலும் சொல்லியுள்ளோம். மேலும், திரைப்படத்தின் முக்கியமான காட்சிகளுக்காக சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் நீதிமன்ற வளாக செட் ஒன்று நிஜமான நீதிமன்ற வளாகத்தைப் போல அமைக்கப்பட்டு, அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
