கனத்த இதயத்துடன் ரேசிங் களத்திற்கு திரும்பும் அஜித்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் அஜித்குமார், திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கார் பந்தய வீரராகவும் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், தனது சொந்த பந்தய அணியான ‘அஜித்குமார் ரேசிங்’ அணியை தொடங்கி சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறார். திரைத்துறையிலும், விளையாட்டு துறையிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், தனது தனித்துவமான முயற்சிகளால் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

அவரது ‘அஜித்குமார் ரேசிங்’ அணி, துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்று குறிப்பிடத்தக்க வெற்றிகளையும், பரிசுகளையும் வென்றுள்ளது. தொடர்ந்து பல முக்கிய ரேசிங் தொடர்களில் இந்த அணி பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறது. இதனால், சர்வதேச கார் பந்தய உலகிலும் அஜித்குமாரின் பெயர் கவனிக்கத்தக்க வகையில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரான்சில் நடைபெறவுள்ள அடுத்த கார் பந்தயப் போட்டிக்காக அஜித்குமார் தயாராகி வருவதாக அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கார் ரேசிங் மீதான அவரது ஆழ்ந்த ஆர்வமும், அர்ப்பணிப்பும் காரணமாக தொடர்ந்து இந்த துறையில் அவர் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில், கடந்த மே 30-ஆம் தேதி அவரது தாயார் காலமானார். அவரது மறைவிற்கு முதல்-அமைச்சர் விஜய் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தனது தாயார் மறைவையொட்டி அஜித்குமார் வெளியிட்டிருந்த அறிக்கையில், “அவர் எங்கள் குடும்பத்தின் இதயமாக இருந்தவர். அளவற்ற அன்பு, அமைதியான மனவலிமை, ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் உருவமாக வாழ்ந்தவர். அவரது இருப்பும், அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கை மதிப்புகளும் எங்கள் வாழ்க்கையை வடிவமைத்தவை. அந்த மதிப்புகள் எங்களுக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்” என்று உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், அந்த இழப்பில் இருந்து நான்கு நாட்களிலேயே மீண்டும் தனது தொழில்முறை பணிகளுக்குத் திரும்பியுள்ள அவர், அடுத்த வாரம் பிரான்சில் நடைபெறும் கார் பந்தயப் போட்டியில் தனது அணியுடன் பங்கேற்க உள்ளார். இதுகுறித்து அஜித்குமார் தனது கார் ரேசிங் பக்கத்தில், “கனத்த இதயத்துடன் மீண்டும் பணிக்குத் திரும்பியிருக்கிறேன். ஆனால் வாழ்க்கை நிச்சயமாக தொடர்ந்து செல்ல வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading