Advertisement

பாலா இல்லாதது என் மனதில் ஒரு மிகப்பெரிய வெற்றிடமாகவே உள்ளது… SPB-ஐ நினைவுகூர்ந்த இசைஞானி இளையராஜா!

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குறித்து இசைஞானி இளையராஜா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “எஸ்.பி.பி போன்றவர் யாரும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கடந்த 2020 ஆம் ஆண்டு காலமானார். அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக கருதப்படுகிறது.

இசையமைப்பாளர் இளையராஜாவும், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் பல தசாப்தங்களாக நெருங்கிய நட்புடன் இருந்தவர்கள். தமிழ் சினிமாவின் இசை வரலாற்றில் மறக்க முடியாத பல ஆயிரக்கணக்கான பாடல்களை இருவரும் இணைந்து வழங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் பாடல்களின் காப்புரிமை தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தாலும், பின்னர் அந்த விரிசல் நீங்கி மீண்டும் நல்லுறவு தொடர்ந்தது. இந்த நிலையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளான ஜூன் 4-ஆம் தேதியன்று இளையராஜா தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவரது பதிவில், “பாலா இல்லாதது என் மனதில் ஒரு மிகப்பெரிய வெற்றிடமாகவே உள்ளது. ஏனெனில், அவருக்கு இணையான ஒரு குரல் இங்கே இல்லை. அவரைப் போல பாட முயற்சிக்கும் பல குரல்கள் இருந்தாலும், அவருடைய தரத்தை யாராலும் எட்ட முடியவில்லை. அவரைப் போல யாராலும் பாட முடியாது. அவருடைய அர்ப்பணிப்பை நகலெடுப்பதும் சாத்தியமில்லை. இதுவரை என் இசையில் வெளியான பெரும்பாலான ஆண் குரல் பாடல்களை எஸ்.பி.பி தான் பாடியிருக்கிறார். அது அவருடைய புகழால் மட்டும் நிகழ்ந்தது அல்ல, அவருடைய அபாரமான திறமையால் நிகழ்ந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஒரு இசையமைப்பாளரின் கம்போசிஷனை மிக வேகமாக புரிந்துகொள்ளும் அசாதாரண திறமை அவருக்கு இருந்தது. ஒரு பாடலில் எந்த வகையான உணர்வுகள் வெளிப்பட வேண்டும் என்பதை துல்லியமாக உணர்ந்து, அதற்கேற்ப மிகுந்த கவனத்துடன் பாடுவார். அதோடு, அந்த பாடலை இன்னும் சிறப்பாக மாற்றுவதற்காக கூடுதல் உழைப்பையும் செலுத்துவார். என்னுடைய எதிர்பார்ப்பு எதுவாக இருந்தாலும், அதை முழுமையாக நிறைவேற்றியவர் அவர். அது உண்மையிலேயே அற்புதமான விஷயம். அதைவிட முக்கியமாக, அவர் எனது சிறந்த நண்பர். மேலும், இதுவரை இருந்த பின்னணிப் பாடகர்களில் அவரது திறமை என்பது ஒப்பிட முடியாத அசாத்தியமான திறமையாகும்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், “50 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருப்பது என்பது சாதாரண சாதனை அல்ல. இசை உலகில் அது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகும். இதுவரை யாரும் அத்தகைய சாதனையை நிகழ்த்தவில்லை. வார்த்தைகளாலும், கற்பனையாலும் முழுமையாக விவரிக்க முடியாத அளவிற்கு அவரது சாதனைகள் வியப்பூட்டுகின்றன. அவரது திறமைக்கு அருகில் கூட யாராலும் செல்ல முடியவில்லை. இனியும் எத்தனை பாடகர்கள் வந்தாலும், அவருடைய சாதனைகளில் நூறில் ஒரு பங்கைக்கூட நெருங்குவது கடினம்” என்று இளையராஜா தனது பதிவில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply