‘பரிமளா & கோ’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் மற்றும் நடிகரான பாக்யராஜ், நடிகை ராதிகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை ராதிகா, “ஊர்வசி படங்களில் பேசும் வசனங்கள் யாருக்கும் சரியாக கேட்காது” என்று நகைச்சுவையாக கூறினார். அதற்கு பதிலளித்த ஊர்வசி, “எல்லோரும் என்னிடம் வேகமாக பேசுங்கள் என்று கூறுவார்கள். ஆனால் நான் அப்படி பேசுவதில்லை. என்னை வைத்து எந்த மொழியிலும் திரைப்படம் எடுக்கலாம் என்று பலரும் கூறியிருக்கிறார்கள்” என்று சிரிப்புடன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஊர்வசி, “இத்தனை ஆண்டுகளாக பலரும் என்னிடம் வந்து, ‘உங்களுக்கு மனோரமா ஆச்சியின் திறமையில் ஒரு பத்து சதவீதம் இருக்கிறது’, ‘நீங்கள் சாவித்ரியைப் போல இருக்கிறீர்கள்’ என்று பல விதங்களில் பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் இதுவரை யாரும் என்னிடம் கேட்காத ஒரு கேள்வி இருக்கிறது. ‘சினிமாவுக்கு வந்த பிறகு நீங்கள் யாரை உங்களுடைய ரோல் மாடலாக எடுத்துக்கொண்டீர்கள்?’ என்பதுதான் அந்த கேள்வி.
அந்த கேள்விக்கான பதிலை நான் இன்று முதல் முறையாக சொல்ல விரும்புகிறேன். நடிகை ராதிகாதான் என்னுடைய ரோல் மாடல். அவருடைய திரைப்படங்களை நான் எத்தனை முறை பார்த்து ரசித்திருக்கிறேன் என்பது யாருக்கும் தெரியாது. ‘இன்று போய் நாளை வா’, ‘பொய் சாட்சி’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை நான் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறேன். அவர் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை அவருக்கே தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்த அளவிற்கு நான் அவரை வியந்து பார்த்திருக்கிறேன். நான் சினிமாவிற்கு வந்த பிறகு, ஒரு சீனியர் நடிகை என்ற எந்தவித பாகுபாடும் இல்லாமல், என் தோளில் கைபோட்டு மிகவும் அன்பாகவும் நட்பாகவும் பழகிய ஒரே கதாநாயகி ராதிகாதான். அதனால் அவரை நான் எப்போதும் மிகுந்த மரியாதையுடனும் பாசத்துடனும் நினைத்து வருகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
