கமல்ஹாசனும் இயக்குநர் சு. அருண் குமாரும் முதன்முறையாக இணையும் திரைப்படம் ‘சண்டியர்’. முழுநீள ஆக்ஷன் படமாக உருவாகும் இதற்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவ் மாஸ்டர்கள் சண்டைக் காட்சிகளை வடிவமைக்க உள்ளனர்.
கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்து இயக்குநர் சு. அருண் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது கவனம் பெற்றுள்ளது. அதில், தனது படைப்புகளில் அறிந்தும் அறியாமலும் ஒரு சிறந்த கலைஞரின் தாக்கம் தொடர்ந்து இருந்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “சில துளி அமிர்தத்தை மட்டுமே சுவைத்துக் கொண்டிருந்த எனக்குப் பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த உன்னதக் கலைஞர் கமல்ஹாசன் அவர்களுடன் இன்று கைகோர்த்து நிற்கிறேன். என்னை இயக்குநராகத் தேர்ந்தெடுத்து, என் கதைக்கு உயிரூட்டிய எனது மானசீக ஆசானை இயக்குவதுடன், இந்தப் பயணத்தில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ளப் போகிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு உறுதுணையாக இருந்த மகேந்திரன், டிஸ்னி ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதைக் காட்டிலும், தனது குழுவினருடன் முழு உழைப்பையும் செலுத்தி ரசிகர்களுக்குச் சிறந்த திரைப்படத்தை வழங்குவதே தங்களின் பதிலாக இருக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
