ராம் சரண், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம் ஜூன் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு சிறப்பு டிக்கெட் கட்டண உயர்வை வழங்குவது ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா அரசுகளில் வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், ‘பெத்தி’ திரைப்படத்திற்கான டிக்கெட் கட்டண உயர்வுக்கு தெலுங்கானா அரசு நேற்று இரவு அனுமதி வழங்கியது. இதன் காரணமாக அந்த அறிவிப்புக்குப் பிறகே முன்பதிவு தொடங்கப்பட்டது. மறுபுறம், ஆந்திரப் பிரதேச அரசு கடந்த வாரமே இதற்கான அரசாணையை வெளியிட்டிருந்தது.
தெலுங்கானா அரசின் உத்தரவின்படி, சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் ரூ.100 வரையும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.125 வரையும் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று இரவு 8 மணிக்கு சிறப்பு பிரிமியர் காட்சியை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு காட்சிக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘பெத்தி’ திரைப்படத்தின் ஆன்லைன் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான முன்பதிவு வசூல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
