2017ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் இயக்குநர் கோபி நைனார் இயக்கிய ‘அறம்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சமூக அக்கறை கொண்ட கதைக்களத்தில் உருவான இப்படம், குடிநீர் பிரச்சினை, ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் முயற்சி மற்றும் அதனைச் சுற்றிய அரசியல் சூழல்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில் மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாராவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அதிகாரமிக்க காட்சிகளில் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் ராமச்சந்திரன் துரைராஜ், சுனு லட்சுமி, விக்னேஷ், ரமேஷ் மற்றும் வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
‘அறம்’ திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்தும் அதன் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்து வந்தது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளரான கே.ஜே.ஆர். ராஜேஷ் சமீபத்திய நேர்காணலில் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதன்படி, ‘அறம் 2’ திரைப்படத்திற்கான கதை முழுமையாக தயாராக இருப்பதாகவும், விரைவில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ‘அறம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
