‘லெவன்’ படத்தில் தனது நடிப்பால் பாராட்டுகளைப் பெற்ற நடிகர் நவீன் சந்திரா, தற்போது தனது 51-வது திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். ஆர்.பி. பாலா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு தற்காலிகமாக ‘என்.சி.51’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் இணைந்து கொண்டாடியுள்ளனர்.



தமிழில் ‘பிரம்மன்’, ‘சிவப்பு’, ‘பட்டாஸ்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘லெவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நவீன் சந்திரா, தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவரது அடுத்த படமான ‘என்.சி.51’, புதுமையான கதைக்களத்தைக் கொண்டிருக்கும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் இயக்குநர் எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ள ஆர்.பி. பாலா, முன்னணி ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையாவுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார். சக்தி பாலாஜி இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள பணிகளை விரைவாக நிறைவு செய்து படத்தைத் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
