தனுஷ் அரசியலுக்கு வருவாரா? மனம் திறந்த‌ இயக்குனர் கஸ்தூரி ராஜா!

சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் கஸ்தூரிராஜாவிடம், போயஸ் கார்டனில் வசித்து வரும் நடிகர் தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். என் மகன்களாக இருந்தாலும், என் பேரன்களாக இருந்தாலும் அரசியலில் ஈடுபடலாம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சென்னையில் மிகவும் செல்வாக்கு மிக்க இடம் என்றால் அது கோபாலபுரம்தான். மறைந்த கருணாநிதி வாழ்ந்த அந்த இடம் பல மாற்றங்களுக்கும் வழிகாட்டியாக இருந்தது. எதிர்காலத்தில் தனுஷின் மகனும் திரைப்படத் துறைக்குள் வரலாம். தற்போது என் மகள் வழிப் பேரன் நடித்து வருகிறார்” என்றார்.மேலும் அவர் கூறுகையில், “தனுஷின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு. திரைப்படத் துறைக்காக அவர் தனது பெயரை தனுஷ் என்று மாற்றிக் கொண்டார். ஆனால் தற்போது விமான நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் அவரை ‘தனுஷ் கே. ராஜா’ என்றே அழைக்கிறார்கள். என் பெயரின் முதலெழுத்துடன் அவருடைய பெயர் இணைந்து அழைக்கப்படுவது எனக்கு பெருமையாக இருக்கிறது.

நான் தேனியில் இருந்து சென்னை வரும்போது ஐம்பது ரூபாய் கூட இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். எனக்கு 19 வயதிலேயே திருமணம் நடைபெற்றுவிட்டது. அப்போது செல்வராகவன் மூன்று வயது குழந்தையாக இருந்தார். அந்தக் காலத்தில் என் மனைவி விஜயலட்சுமியின் ஆதரவோடு சென்னை வந்து பல சிரமங்களை எதிர்கொண்டு இயக்குநராக உயர்ந்தேன். ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம்தான் எங்கள் குடும்ப வாழ்க்கையை மாற்றிய படம்.

வேதியியல் பொறியியல் படித்த செல்வராகவன், திரைப்படத் துறைக்கு வர வேண்டும் என்று விரும்பியபோது, முதலில் படிப்பை முடித்து விட்டு பின்னர் சினிமாவுக்கு வருமாறு நான் கூறினேன். அவர் தங்கப்பதக்கம் பெற்று தனது கல்வியை முடித்த பிறகே ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தை உருவாக்குவதற்காக நான் நான்கு கோடி ரூபாய் கடன் வாங்கினேன்.என் மகள்களும் தங்களது அண்ணன் திரைப்படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அந்தப் படம் வெற்றி பெற்றதன் மூலம் எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலைமையே மாறியது. என் இரண்டு மகள்களும் மருத்துவர்களாக உள்ளனர். தற்போது சென்னையில் சிறந்த மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இப்போது என் மகள் வழிப் பேரன் பவிஷ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மற்றொரு பேரன் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். நானும் ‘ஹபிபீ’ திரைப்படத்தில் நடித்துள்ளேன். தற்போது எனக்கு 72 வயதாகிறது. நான் உருவாக்கிய திரைப்படங்கள் கிராமிய மணம் மிக்கவையாக இருக்கும். ஆனால் என் வாரிசுகள் உருவாக்கும் படங்கள் முற்றிலும் மாறுபட்ட பாணியில் உள்ளன.காதலும் கல்வியும் மனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை. இன்றைய காலத்தில் பெண்களும் அதிக அளவில் மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். அனைவரும் கல்வியில் முன்னேற வேண்டும். என்னை இந்த நிலைக்கு உயர்த்தியது கல்விதான். ஆனால் நான் காதலின் காரணமாக என் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவன்” என்று கஸ்தூரிராஜா கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading