நான் சாதனைகளுக்காகவோ அல்லது விருதுகளுக்காகவோ காத்திருக்கும் மனிதன் அல்ல – இசைஞானி இளையராஜா!

இசையமைப்பாளர் இளையராஜாவின் ‘வேலியண்ட்’ சிம்பொனி இசை நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று இரவு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், அவரது மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், நடிகர் சந்தான பாரதி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும், ஏராளமான பாடகர்கள் மற்றும் பாடகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த இசை நிகழ்ச்சியை இளையராஜா தனது இரண்டு பேரன்களுக்கு நடுவில் அமர்ந்து ரசித்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த இசைக் கலைஞர்கள் சிம்பொனி இசையை நிகழ்த்தினர். அதன் பின்னர் இளையராஜாவின் பிரபலமான சில திரைப்படப் பாடல்களையும் சிம்பொனி இசைக் குழுவினர் இசைத்தனர். நிகழ்ச்சியின் போது ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இதயம் போகுதே’ பாடல் எவ்வாறு உருவானது என்பதையும், அந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்ட சிம்பொனி இசையின் சிறப்புகளையும் இளையராஜா விரிவாக விளக்கினார். பின்னர் அதனை நேரடியாக இசைத்துக் காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய இளையராஜா, “நமது இசையையும் சிம்பொனி இசையையும் ஒன்றிணைத்திருப்பது மிகப்பெரிய சாதனையாகும். இசை உலக வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய சாதனையாகும். நான் சாதனைகளுக்காகவோ அல்லது விருதுகளுக்காகவோ காத்திருக்கும் மனிதன் அல்ல. நான் நடப்பதும், நான் பேசுவதும் கூட ஒரு சாதனையாக மாறும்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். தொடர்ந்து கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் கங்கை அமரன் ஆகியோர் அவரை வாழ்த்தி பேசினர்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “இந்த இசை நிகழ்ச்சியை நேரில் கேட்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக விரும்பி வந்தேன். தற்போது எனது திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், “வியன்னாவில் சிம்பொனி இசையை கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அதேபோன்று சென்னையில் இந்த நிகழ்ச்சியை கேட்பது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது” என்று கூறினார். நடிகர் பார்த்திபன், “நான் பிறந்த நாளிலிருந்தே இளையராஜாவின் ரசிகனாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும் இன்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பாடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading