ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குநர் எச். வினோத்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஹர்ஷவரதன், இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படம் குறித்து பேசிய இயக்குநர் ஹர்ஷவரதன், 1970-களின் தொடக்க காலத்தை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாக தெரிவித்தார். குதிரைப் பந்தய உலகத்தை மையமாகக் கொண்டு, நேர்மை மற்றும் உயர்ந்த இலட்சியங்களைக் கொண்ட ஒரு இளைஞனின் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றியை நோக்கிய பயணம் ஆகியவற்றை சுவாரஸ்யமான முறையில் சொல்லும் கதையாக இந்த திரைப்படம் உருவாகி வருவதாக கூறினார்.
மேலும், 1970-களின் சென்னை நகரை திரையில் உயிர்ப்பிக்க பல்வேறு முன்தயாரிப்பு பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அந்தக் காலகட்ட மக்களின் வாழ்க்கை முறை, கலாசாரம் மற்றும் சென்னையின் தனித்துவமான சூழல் ஆகியவற்றை மிக நுணுக்கமாக திரையில் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
