‘பெத்தி’ படத்தின் மிக முக்கியமான தூண் ஏ.ஆர். ரஹ்மான்… நடிகர் ராம் சரண் பெருமிதம்!

புச்சி பாபு இயக்கத்தில் நடிகர் ராம் சரண், சிவராஜ்குமார் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஜூன் 4-ஆம் தேதி வெளியாக உள்ளது. ரத்னவேலு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சென்னை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராம் சரண், படம் குறித்தும் தனது அனுபவங்கள் குறித்தும் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசுகையில், “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், சில தருணங்களில் என்ன பேச வேண்டும் என்பதே தெரியாமல் போய்விடுகிறது. தற்போது நானும் அப்படிப்பட்ட ஒரு உணர்வில்தான் இருக்கிறேன். சென்னை வந்தாலே எனக்கு எப்போதும் ஒரு தனித்துவமான உணர்வு ஏற்படும். இந்த நகரம் எனக்கு மிகவும் நெருக்கமானது. நான் பிறந்து வளர்ந்த இடம் சென்னை. என் தாயாரும் இங்குதான் பிறந்தவர். அதனால் இந்த நகரம் எனக்கு எப்போதும் தாய்வீட்டைப் போன்ற உணர்வைத் தருகிறது.

‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘மகதீரா’ அல்லது வேறு எந்த திரைப்படமாக இருந்தாலும், சென்னை வந்து விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது நான் வீட்டிற்கு திரும்பி வந்ததைப் போன்ற உணர்வே ஏற்படுகிறது. ‘பெத்தி’ திரைப்படத்தை முழுமையாக நிறைவு செய்ய எங்களுக்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது. மொத்தமாக 285 நாட்களுக்கும் மேலாக இந்தப் படத்திற்காக உழைத்தோம். ஆனால் எங்களையெல்லாம் விட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபுதான். கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக அவர் இந்தக் கதையுடனும் இந்தப் படத்துடனும் வாழ்ந்து வருகிறார்.

நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம் என்று சொன்னாலும், உண்மையில் இப்படிப்பட்ட சிறந்த கலைஞர்கள் அனைவரும் ஒரே படத்தில் இணைந்திருக்கும்போது அந்தப் பயணம் கஷ்டமாகத் தெரியாது. இந்தக் கதையை எங்களிடம் கொண்டு வந்த இயக்குநர் சுகுமாருக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் படத்தின் மிக முக்கியமான தூண் ஏ.ஆர். ரஹ்மான். ஒரு வீட்டைத் தாங்கும் பல தூண்களில் நடுவே இருக்கும் வலிமையான ஆதாரத் தூண் எப்படியோ, அதுபோல இந்தப் படத்தின் மைய சக்தியாக அவர் இருக்கிறார். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாலை நேரம் வரை விழித்திருந்து பின்னணி இசைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது அர்ப்பணிப்பும் உழைப்பும் எங்களுக்கு அனைவருக்கும் மிகப்பெரிய ஊக்கமாக உள்ளது.

சிவராஜ்குமார் திரையில் தோன்றும் ஒவ்வொரு தருணமும் ஆற்றலால் நிரம்பியதாக இருக்கும். ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். காரில் பயணம் செய்யும் நேரங்களிலும் கூட அந்தக் காட்சிகளை மீண்டும் மீண்டும் ரசிப்பேன். குறிப்பாக அவர் மெதுவாக நடந்து வரும் காட்சியும், பீடி பிடிக்கும் அந்த தனித்துவமான பாணியும் இன்று ரசிகர்களிடையே மறக்க முடியாத தருணங்களாக மாறிவிட்டன. அவரது கண்கள் மட்டுமே ஆயிரம் வார்த்தைகளைப் பேசும் திறன் கொண்டவை. இந்தப் படத்திலும் அவர் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு குறித்து பேச வார்த்தைகளே இல்லை. அவருடன் நான் ஏற்கனவே நான்கு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளேன். நான் தயாரித்த இரண்டு படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். அவர் உண்மையிலேயே ஒரு மாபெரும் கலைஞர். ‘எந்திரன்’ திரைப்படத்தில் அவர் உருவாக்கிய காட்சிகள், குறிப்பாக பிரம்மாண்டமான பாடல் காட்சிகள் என்னை மிகவும் கவர்ந்தவை. ‘அந்த மாதிரியான காட்சிகளை எனக்கும் உருவாக்கித் தர வேண்டும்’ என்று நான் அடிக்கடி அவரிடம் கூறுவேன்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஷங்கர் போன்ற மிகப் பெரிய கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருந்தாலும், அந்த அனுபவத்தைப் பற்றி அவர் ஒருபோதும் பெருமையாகக் கூறிக் கொள்வதில்லை. அதுவே அவரது தனிச்சிறப்பு.இந்தத் திரைப்படத்தை நான் வெறும் நடிகராக மட்டுமே செய்யவில்லை. மனதார நேசித்து செய்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு சென்ற பிறகும், அந்த நாள் நடந்த படப்பிடிப்பு அனுபவங்களை என் நண்பர்களிடமும், என் தாயாரிடமும் தொடர்ந்து பகிர்ந்து கொண்டே இருப்பேன். ‘போதும், நாள் முழுவதும் இதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாய்’ என்று அவர்கள் கூறும் அளவிற்கு இந்தப் படம் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.

எங்கள் வீட்டில் ஒரு நம்பிக்கை உண்டு. ஒரு திரைப்படத்தைப் பற்றி வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால், அந்தப் படம் நிச்சயமாக பெரிய வெற்றி பெறும் என்று கூறுவார்கள். ‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘ரங்கஸ்தலம்’, ‘மகதீரா’ போன்ற திரைப்படங்களைப் பற்றியும் நான் அப்படித்தான் தொடர்ந்து பேசினேன். அதேபோல் தற்போது ‘பெத்தி’ திரைப்படத்தைப் பற்றியே வீட்டில் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். அதனால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்குள் உறுதியாக இருக்கிறது.

மேலும் முதல்வர் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் வெற்றிகரமான திரைப்பட வாழ்க்கையையும் விட்டு விட்டு மக்கள் சேவைக்காக அரசியலுக்குள் வந்திருப்பது பாராட்டத்தக்க முடிவாகும். திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவராக இது எனக்கு பெருமையளிக்கிறது. அவருக்கும் தமிழக மக்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ராம் சரண் கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading