இயக்குநர் அமீர் இயக்கிய ‘யோகி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பரவலாக அறிமுகமானவர் நடிகர் யோகி பாபு. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியுள்ளார்.
இதற்கிடையில், யோகி பாபு கதாநாயகனாக நடித்த ‘மண்டேலா’ திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்று பெரும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகர் யோகி பாபு நடிக்கும் 300-வது திரைப்படத்திற்கு ‘அர்ஜுனன் பேர் பத்து’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டி. இமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, அருள்தாஸ், சென்றாயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு பிரதீப் காலிராஜா ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார். தேவ் சினிமாஸ் சார்பில் கிநிறுவனத்தின்ருத்திகா தங்கப்பாண்டி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். மேலும், திரைப்படத்தின் பாடல்களை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.
இந்த நிலையில், ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து, திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் வருகிற ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
—
