ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்களைக் கடந்த பின்னரும் ரசிகர்களின் ஆதரவு குறையாமல் நீடித்து வருவதால், வசூல் ரீதியாகவும் படம் வெற்றிகரமாக பயணித்து வருகிறது. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா மற்றும் அனகா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜி அளித்த ஒரு நேர்காணலில், ‘கருப்பு’ படத்தை பார்த்த பிறகு நடிகர் ரஜினிகாந்த், அமீர் கான் மற்றும் சிலம்பரசன் உள்ளிட்ட பலரும் தன்னை நேரடியாக தொடர்புகொண்டு பாராட்டியதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, “இப்படிப்பட்ட தருணங்கள் என் வாழ்க்கையில் நிகழும் என்று நான் எண்ணியிருந்தாலும், அது உண்மையாகும் போது ஏற்படும் மகிழ்ச்சி தனித்துவமானது. ரஜினிகாந்த் சார் நேரடியாக என்னை தொடர்புகொண்டு பாராட்டினார். அதேபோல் சூர்யா சாருக்கு அமீர் கான் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். சிலம்பரசனும் நேரில் தொடர்புகொண்டு தனது பாராட்டுகளை தெரிவித்தார். இதைத் தவிர பல முக்கிய இயக்குநர்களும் திரைப்படத்தைப் பாராட்டி பேசியிருந்தனர்.
உண்மையில் அவர்கள் அனைவரும் என்னைத் தொடர்புகொண்டு பேச வேண்டிய அவசியமே இல்லை. திரைப்படத்தை பார்த்துவிட்டு தங்களுக்குள் கருத்துகளை பகிர்ந்துகொண்டு சென்றிருக்கலாம். ஆனால் மற்றவர்களின் உழைப்பை மதித்து, நேரடியாக தொடர்புகொண்டு பாராட்டும் நல்ல மனம் அவர்களிடம் உள்ளது. குறிப்பாக ரஜினிகாந்த் சார் என்னை அழைத்து பேசிய தருணம் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருந்தது. சிறுவயதிலிருந்தே ஒரு திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு ‘சூப்பர் ஸ்டார் அழைத்து பாராட்டினார்’ என்ற செய்திகளை நாம் பார்த்திருக்கிறோம். இன்று அந்த அனுபவம் எனக்கே கிடைத்திருப்பது மறக்க முடியாத ஒன்று.
நான் சிறு வயதிலிருந்தே ரஜினிகாந்த் சாரின் தீவிர ரசிகன். ‘பாட்ஷா’, ‘படையப்பா’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ போன்ற திரைப்படங்கள் என் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவை. அந்த திரைப்படங்களை திரையரங்குகளில் பார்த்த அனுபவங்கள் இன்றளவும் என் மனதில் நிலைத்திருக்கின்றன. அந்த நடிகரிடமிருந்து நேரடியாக பாராட்டு கிடைத்திருப்பது எனக்கு மிகப்பெரிய அங்கீகாரமாகும். நாங்கள் எதிர்பார்த்த மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்று. அது தற்போது நிகழ்ந்திருப்பதால் மனநிறைவு அளவிட முடியாத அளவிற்கு உள்ளது” என்று கூறியுள்ளார்.
