Avni Movies நிறுவனம் சார்பில் குஷ்பு சுந்தர் அவர்களின் மகள் அனந்திதா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டபுள் ஆக்குபன்சி’. இயக்குநர் அஷ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய குஷ்பு சுந்தர், “வாழ்க்கையில் ஒரு வெறித்தனமான முயற்சி இருக்கும் போது வெற்றி நம்மை தேடி வரும். என்னுடைய மகள் தயாரிப்பாளராக களமிறங்கியது மிகவும் பெருமையாக உள்ளது. இது முழுக்க முழுக்க இளைஞர்களின் படைப்பு. தற்போதைய தலைமுறையினரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. தலைமுறை இடைவெளி என்ற கருத்தே இங்கு இல்லை. அதில் எந்தத் தவறும் இல்லை.
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஒருவருக்கு நடிப்பில் ஆர்வம் உள்ளது. மற்றொருவர் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். தற்போது குடும்ப நலனில் கவனம் செலுத்தி வருகிறேன். அதே சமயம் தெலுங்கில் மூன்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழிலும் சிறந்த வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக தொடர்ந்து நடிப்பேன்” என்று தெரிவித்தார்.
மேலும், விஜய் குறித்து பேசிய அவர், “நானும் விஜயும் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும், எங்களுக்கிடையேயான அக்கா – தம்பி பாசம் எப்போதும் மாறாது. தற்போது தினசரி ஐந்து காட்சிகளுக்கு அனுமதி வழங்கியிருக்கும் முதல்-அமைச்சர் விஜயின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பதால், திரைப்படத் துறையின் சிரமங்கள் அவருக்கு நன்றாக புரிந்திருக்கின்றன. தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் சினிமாவும் வளர்ச்சி பெறும்” என்று கூறினார்.
