சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை சூர்யா நடித்த திரைப்படங்களில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படமாக ‘கருப்பு’ உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அவரது அடுத்த திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இந்த திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், தன்னைவிட அதிக வயது வித்தியாசம் கொண்ட சூர்யாவை இளம் பெண்ணான மமிதா பைஜூ காதலிப்பது போன்ற கதைக்களம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து, அதற்குப் பிந்தைய தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இந்த திரைப்படத்தை Think Studios நிறுவனம் வெளியிடுகிறது.
