இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’. இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா ஜெரெமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமான திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டு, வடசென்னை பகுதி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிலம்பரசனின் திரைப்பயணத்தில் இதுவரை உருவாகிய திரைப்படங்களில் மிகவும் பிரம்மாண்டமான படைப்புகளில் ஒன்றாக ‘அரசன்’ அமையும் என்றும் திரையுலக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இன்னும் மூன்று மாதங்களுக்குள் திரைப்படத்தின் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திரைப்படத்தின் மீது ரசிகர்களிடையே ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு சமீபத்தில் அளித்திருந்த நேர்காணலில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகவிருந்த திரைப்படத்திற்காக நடிகர் சிலம்பரசன் சுமார் ஓராண்டு காலமாக தனது தலைமுடியை வளர்த்துவந்ததாக தெரிவித்தார். ஆனால், ‘அரசன்’ திரைப்படத்தின் கதையை கேட்ட பிறகு, அந்த திரைப்படத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து, இந்த திரைப்படத்திற்காக தனது தோற்றத்தை முழுமையாக மாற்றிக்கொள்ள சிலம்பரசன் முடிவு செய்ததாகவும் கூறினார்.
மேலும், இந்த திரைப்படத்தின் கதாபாத்திரத்துடன் முழுமையாக ஒன்றிப்போய் வாழ்ந்த சிலம்பரசன், இயக்குநர் வெற்றிமாறனின் மனதில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். படப்பிடிப்பு நடைபெறும் நேரங்களிலும் கூட, அவர் வர வேண்டிய நேரத்திற்கும் முன்பாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவதாகவும் கலைப்புலி எஸ். தாணு பாராட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க வேண்டும் என்பது சிலம்பரசன் தனிப்பட்ட முறையில் முன்வைத்த முக்கியமான கோரிக்கையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அனிருத்தின் இசை இந்த திரைப்படத்தின் கதைக்களத்திற்கும் உணர்வுக்கும் மிகவும் பொருத்தமாக அமையும் என்று சிலம்பரசன் உறுதியாக நம்பியதாகவும், அவரது இந்த விருப்பத்தை இயக்குநர் வெற்றிமாறனும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
