புதுமுக நடிகர்களை வைத்து இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கிய ‘யாத்திசை’ திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுகளை பெற்றது. அந்த திரைப்படத்தின் மூலம் தனித்துவமான இயக்குநராக கவனம் பெற்ற தரணி ராசேந்திரன், தற்போது தனது அடுத்த படைப்பாக பிரம்மாண்டமான பீரியட் டிராமா திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த புதிய படத்தில் நடிகர் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்னும் இந்த படத்திற்கு தலைப்பு அறிவிக்கப்படாத நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஜே.கே. பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படம், மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தில், இந்திய தேசிய ராணுவமான INA-வில் அதிகாரியாக முக்கியமான கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். மேலும், நடிகர் சமுத்திரக்கனியும் கதையின் முக்கிய திருப்புமுனையை உருவாக்கும் வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடன் கிஷோர், சேயோன், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதோடு நடிகர் அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. சேது முருகவேல் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளராக சார்தக் கல்யாணி பணியாற்றியுள்ளார். வரலாற்றுப் பின்னணியுடன் உருவாகும் இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தொழில்நுட்ப ரீதியாகவும் படம் வித்தியாசமான அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், படத்தின் தலைப்பு, முதல் பார்வை போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘யாத்திசை’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இந்த புதிய படமும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
