சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஆர்.பி. உதயகுமார், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்ததுடன், திரைப்படத் துறைக்காக எடுக்கப்பட்டுள்ள புதிய முடிவுகள் குறித்து தனது கருத்துக்களையும் பகிர்ந்துள்ளார். அதாவது, “தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்படத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருப்பது மட்டுமல்லாமல், சனி மற்றும் ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களிலும் ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு முடிவாகும்.
தற்போது தமிழ் திரையுலகம் காப்பாற்றப்பட வேண்டிய அபாயகரமான சூழ்நிலையில் உள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களின் திரைப்படத் துறைகள் மிகவும் முன்னேறி வருகின்றன. அங்குள்ள நடிகர்கள் முதலில் கதையைத் தேர்வு செய்கிறார்கள். அதன் பிறகு அந்தக் கதைக்கு ஏற்ற பட்ஜெட்டை கேட்டுக்கொள்கிறார்கள். மேலும், படம் வெளியாகி லாபம் கிடைத்த பிறகே அதிலிருந்து ஒரு பங்கினை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் நம்முடைய நடிகர்கள் அந்த மாதிரியான நடைமுறையில் இல்லை.
மேலும், என்னைப் போன்ற இயக்குநர்களுக்கும், பேரரசு போன்றவர்களுக்கும் தற்போது திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைப்பதில்லை. எழுத்தாளர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள், ஒப்பனை கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சரிடம் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். ஆனால் திரைத்துறையினர் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதே எங்கள் எண்ணம். அதனால்தான் இயக்குநர் சங்கத்தின் சார்பில் நாங்கள் அவரைச் சந்தித்தபோது எந்தவித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை.
அவருக்கு எது நல்லது, எது கெட்டது என்பது நன்றாகத் தெரியும். அவர் சரியான முடிவுகளை நிச்சயமாக எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதேசமயம், தமிழ் திரையுலகம் உண்மையில் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், திரையரங்குகளில் டிக்கெட் விலையை குறைக்க வேண்டும். மும்பை போன்ற பெரிய நகரங்களில்கூட 70, 80 ரூபாய்க்கு திரைப்பட டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. அதுபோன்ற நிலை தமிழ்நாட்டிலும் உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று தெரிவித்துள்ளார்.
