நடிகர் மோகன்லாலும் இயக்குநர் ஜீத்து ஜோசஃபும் இணைந்த உருவாக்கிய ‘திரிஷ்யம்’ திரைப்படத் தொடரின் மூன்றாவது பாகம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியது. ஏற்கனவே வெளியான முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றிருந்ததால், இந்த மூன்றாம் பாகத்திற்கும் ஆரம்பத்திலிருந்தே அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம், சில ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களிலும் விமர்சனங்களிலும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பும், ‘திரிஷ்யம்’ தொடருக்கான ரசிகர்களின் ஆர்வமும் காரணமாக, வெளியீட்டிற்கு முன்பே பெரியளவில் டிக்கெட் முன்பதிவுகள் நடைபெற்றன. இதன் விளைவாக, படம் வெளியான முதல்நாளிலேயே உலகளவில் சுமார் ரூ.45 கோடி வரையிலான வசூலைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், படம் வெளியான வெறும் 58 மணி நேரத்திலேயே ரூ.100 கோடி வசூலை கடந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தற்போது பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருப்பதாகவும், ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், படத்தின் மேக்கிங் மற்றும் படப்பிடிப்பு தொடர்பான சிறப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
