நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள சேத்தூர் கிராமத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசிய கருத்துகள் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. அந்த நிகழ்ச்சியில் பேசிய சமுத்திரக்கனி, “நடிகர் விஜயின் அரசியல் வருகை ஒரு சுனாமி போல அமைந்துள்ளது. கடந்த தேர்தலில் பணம், ஜாதி, மதம், அகங்காரம் போன்ற பல விஷயங்கள் மக்கள் மூலம் உடைக்கப்பட்டுவிட்டன. மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த அரசியல் கட்சிகளுக்கு, தமிழக மக்கள் தங்களின் தீர்ப்பின் மூலம் பதிலடி கொடுத்துவிட்டார்கள். எல்லா கட்சிகளிடமும் பணத்தை வாங்கிக்கொண்டு, பணமே தராத ஒருவருக்கு ஓட்டு போட்ட மக்கள் தான் உண்மையான அறிவாளிகள் என்பதை நிரூபித்துவிட்டார்கள்” என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “இந்த தேர்தல் என்ற சுனாமி பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அதில் சில நல்ல மனிதர்களும் தோல்வியடைந்தது எனக்கு வருத்தத்தை அளித்தது. குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோரின் தோல்வி எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அதேபோல் அண்ணன் சீமானின் தோல்வியும் வருத்தமளித்தது. அவரது கட்சியில் இருந்து சிலர் சட்டமன்றத்துக்குள் சென்றிருக்கலாம் என்று நினைத்தேன். மேலும் அண்ணன் திருமாவளவன் மற்றும் தம்பி அண்ணாமலை ஆகியோரும் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளே சென்றிருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது” என்று தெரிவித்தார்.
சமுத்திரக்கனியின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்துகளை வெளியிட்டனர். இதுகுறித்து பின்னர் சமுத்திரக்கனியிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, அவர் தனது உணர்ச்சிப் பின்னணியை பகிர்ந்துகொண்டார். “என் சொந்த ஊரான சேத்தூரில் இருந்த எஸ்.பி. செல்லப்பிள்ளை என்ற கம்யூனிஸ்ட் தலைவர் தான் எனக்குள் கம்யூனிச சிந்தனையை விதைத்தவர். அவர் எனக்கு குருநாதர் போன்றவர். மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் மறைந்துவிட்டார். அவரது படத்திறப்பு விழாவில் தான் நான் பங்கேற்று பேசினேன். அந்த சூழ்நிலையில் பேச வேண்டிய நிலை இருந்ததால் பேசினேன். இனிமேல் சில நாட்களுக்கு நான் மவுனமாக இருக்கப்போகிறேன். நடக்கும் விஷயங்களை அமைதியாக கவனிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
