பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ள இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய புகழ்பெற்ற ‘வேள்பாரி’ நாவலை திரைப்படமாக இயக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்கான திரைப்பட உரிமையை ஏற்கனவே பெற்றுள்ள ஷங்கர், இந்த நாவலை மூன்று பாகங்களாக மிகப்பெரிய அளவில் திரைப்படமாக உருவாக்க உள்ளதாக கடந்த சில பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
மேலும், ‘வேள்பாரி’ தான் தனது கனவு திரைப்படம் என்றும் ஷங்கர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்திற்கான ‘ப்ரீ புரொடக்ஷன்’ பணிகள் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதால், அதற்கே சுமார் ஒரு வருட காலம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது அந்தப் பணிகளை ஷங்கரும் அவரது தொழில்நுட்பக் குழுவினரும் முழு வீச்சில் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், ‘வேள்பாரி’ திரைப்படத்தின் பணிகள் முழுமையாக துவங்குவதற்கு முன், ஒரு இளம் நடிகரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். வழக்கமாக அவர் இயக்கும் பிரம்மாண்ட சமூக அல்லது கமர்ஷியல் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், இந்த படம் ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த புதிய படத்திற்காக தற்போது இரண்டு இளம் ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த திரைப்படத்தை குறுகிய காலத்திலேயே விரைவாக முடிக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
