கடந்த 2007ஆம் ஆண்டு இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படைப்பாக பார்க்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா மற்றும் நடிகை அஞ்சலி இணைந்து நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று இன்று வரை நினைவுகூரப்படுகின்றன. இந்த திரைப்படத்திற்கு பிறகு ஜீவா மற்றும் அஞ்சலி இருவரும் எந்த திரைப்படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.
இந்த நிலையில், சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா மற்றும் அஞ்சலி மீண்டும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய திரைப்படத்தை ‘அங்காடி தெரு’, ‘வெயில்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் வசந்தபாலன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் துபாயை சேர்ந்த கண்ணன் ரவி குழுமம் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இயக்குநர் வசந்தபாலனின் ‘அங்காடித் தெரு’ மற்றும் ‘அரவான்’ திரைப்படங்களில் நடிகை அஞ்சலி ஏற்கனவே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் வசந்தபாலன் இயக்கத்தில் அவர் இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
