சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லிங்குசாமி முதன்முறையாக இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘ஆனந்தம்’. மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் 2001ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தனது குடும்ப வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் லிங்குசாமி இந்த குடும்பக் கதையை உருவாக்கியிருந்தார். அந்த காலகட்டத்தில் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.
இந்த திரைப்படம் ஒரு மல்டி ஸ்டார் குடும்ப படமாக உருவானது. மலையாள நடிகர் மம்முட்டி அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், அவரின் தம்பிகளாக முரளி, அப்பாஸ் மற்றும் ஷ்யாம் கணேஷ் நடித்திருந்தனர். மம்முட்டிக்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். முரளிக்கு ஜோடியாக ரம்பாவும், அப்பாஸுக்கு ஜோடியாக சினேகாவும் நடித்திருந்தனர். மேலும் குடும்பத்தின் பெற்றோர்களாக டெல்லி கணேஷ் மற்றும் ஸ்ரீவித்யா நடித்திருந்தனர். அண்ணன்-தம்பிகள் இடையேயான பாசம், குடும்பத்திற்குள் வரும் மருமகள்களால் உருவாகும் சிக்கல்கள் உள்ளிட்ட உணர்வுபூர்வமான சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாகியிருந்தது.
இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் இடம்பெற்ற ‘ஆசை ஆசையாய் இருக்கிறதே’, ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’, ‘என்ன இதுவோ’ உள்ளிட்ட பாடல்கள் அந்த காலத்தில் மிகப்பெரிய ஹிட் பாடல்களாக அமைந்தன. மேலும் மலையாள நடிகர் மம்முட்டி தமிழில் நடித்த திரைப்படங்களில் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற முக்கியமான படங்களில் ஒன்றாக ‘ஆனந்தம்’ பார்க்கப்படுகிறது. இன்றளவும் அண்ணன்-தம்பி உறவை மையமாக கொண்ட படங்கள் குறித்து பேசும்போது ரசிகர்களுக்கு முதலில் நினைவிற்கு வரும் படங்களில் இதுவும் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த படம் வெளியான பிறகு இதேபோன்ற குடும்ப பின்னணியிலான பல திரைப்படங்களும் தொடர்ந்து வெளியாகின.
