நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, தமிழக முதல்வர் விஜயிடம் திரைப்படத் துறை சார்ந்த சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். அவர் பேசியதாவது, “மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு ஒரு கோரிக்கை. கமல் சார் கேட்டுக் கொண்டது போல அரசு சார்பில் விரைவில் ஒரு ஓடிடி தளம் தொடங்கப்பட்டால் மிகவும் நல்லதாக இருக்கும். திடீரென உருவான ஓடிடி சந்தை ஒரு காலத்தில் மிக வேகமாக வளர்ச்சி பெற்றது. ஆனால் தற்போது அதன் நிலை திடீரென சரிந்து விட்டது. இதனால் திரைப்படங்களின் வியாபாரத்தை எங்கே கொண்டு செல்ல வேண்டும் என்ற குழப்பத்தில் இருக்கிறோம்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “ஓடிடி துறையை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வந்தால் திரைப்படத் துறைக்கு அது மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல் திரையரங்கு டிக்கெட் விலைகள் பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. ஆனால் மற்ற அனைத்து செலவுகளும் தற்போது அதிகரித்துவிட்டன. திரைப்படம் தயாரிப்பதற்கான செலவுகளும் மிகவும் உயர்ந்துவிட்டன. இந்நிலையில் டிக்கெட் விலையை மட்டும் நீண்ட காலமாக மாற்றாமல் வைத்திருப்பது சிரமமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, “திரைப்படத் துறை தற்போது மிகவும் குழப்பமான நிலையில் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பே திரையரங்கு டிக்கெட் விலைகள் மாற்றப்பட்டன. ஆனால் அதன் பிறகு விலை உயர்வு எதுவும் நடைபெறவில்லை. இன்று அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. எனவே திரையரங்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலனை செய்தால் நல்லதாக இருக்கும்” என்று தனது வருத்தை வெளிப்படுத்தினார்.
