பகத் பாசில் – ‘மெய்யழகன்’ பட இயக்குனர் பிரேம் குமார் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடக்கம்!

‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் சி. பிரேம்குமார் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படம் திரில்லர் கதைக்களத்தில் உருவாக இருப்பதாக இயக்குநர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதில் மலையாள நடிகர் பகத் பாசிலும், நடிகை ஷிவதாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

ஐசரி கணேஷ் வழங்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் மான்சூன் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. வடிவேலுவுடன் இணைந்து நடித்த ‘மாரீசன்’ படத்திற்கு பிறகு, பகத் பாசில் தமிழில் முழுநீள கதாநாயகனாக நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப் படம் இதுவாகும். மேலும், இப்படத்தில் சேத்தன், ஹரிஷ் உத்தமன் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மகேஷ் நாராயணன் இயக்கிய ‘பேட்ரியாட்’ திரைப்படத்தில் பகத் பாசிலும் ஷிவதாவும் இணைந்து நடித்திருந்தாலும், இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணையும் முதல் திரைப்படம் இதுவாகும். அதேசமயம், நடிகை ஷிவதா சமீபத்தில் சமுத்திரக்கனியுடன் ‘தடயம்’ ஓடிடி வெப் தொடரிலும், சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன. தற்போது படத்தின் பணிகள் பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 32-வது திரைப்படமாக இது அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் மூலம் பகத் பாசில் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் கூட்டணி முதன்முறையாக இணைகிறது. இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பை ஒரே கட்டமாக நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading