நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஆக்சன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘ஐ அம் கேம்’ திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான்-இந்தியா படமாக வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சிறப்பு போஸ்டர் ஒன்றின் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
